Sports05 June 2026

உலகை அதிர வைத்த 23 வயது இலங்கை இளைஞர்!

இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே (Rumesh Pathirage), ரோம் டைமண்ட் லீக் (Rome Diamond League) தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த அசாத்திய சாதனை மூலம் ஆசிய வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும், உலக வரலாற்றின் மிகச்சிறந்த தடகள வீரர்களின் வரிசையில் எட்டாவது இடத்தையும் பிடித்து வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.

ஆண்கள் பிரிவிற்கான ஈட்டி எறிதல் போட்டியின் தனது இரண்டாவது முயற்சியிலேயே இந்த பிரம்மாண்ட தூரத்தை எட்டிய பத்திரகே, புதிய இலங்கை தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

அத்துடன், இது 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தூரமாக (World-leading mark) பதிவாகியுள்ளதுடன், அவரது தனிப்பட்ட வாழ்வின் மிகச்சிறந்த (Personal Best) சாதனையாகவும் அமைந்துள்ளது.

இதன் மூலம், கடந்த 20 வருடங்களாக ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் (Andreas Thorkildsen) வசம் இருந்த 90.34 மீற்றர் ரோம் டைமண்ட் லீக் போட்டி சாதனையை முறியடித்து, இளம் வயதிலேயே உலகத் தடகள அரங்கில் இலங்கையின் கொடியை ருமேஷ் பத்திரகே உயரப் பறக்கவிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes