கோட்டாபய உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட இரு புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்த அவர், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், விசாரணைகளைத் தடையின்றி நடத்தி முடிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கிய பதில்களும் வருமாறு:
கேள்வி: சுரேஷ் சலேயை தடுத்து வைத்துள்ள இடத்தில் அவருக்கு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
பதில்: சுரேஷ் சலேக்கு எந்தவிதமான சித்திரவதைகளும் செய்யப்படவில்லை. எவ்வித சட்டவிரோத முறைகளும் கையாளப்படவும் இல்லை. ஒரு புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் இவ்வாறான ஒருவரை அரசாங்கம் எவ்வாறு கையாளும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு முதல் நாளில் இருந்தே ஒரே சீரான முறையிலேயே உணவு மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கேள்வி: மருத்துவ பரிசோதனைகளின் போது அவர் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அவரது மனநிலை குறித்து பரிசோதித்த மருத்துவர், அவரது ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் களையப்பட்டு உடல் ரீதியாக சோதனையிடப்பட்டதாகக் கூறுவதை அரசாங்கம் மறுக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் விசாரணைகளை திசைதிருப்புவதற்காகவே முன்வைக்கப்படுகின்றன.
கேள்வி: சுரேஷ் சலேயின் உறவினர்கள் குறிப்பாக அவரது மனைவி எனக் கூறப்படும் பெண் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன?
பதில்: அவரது தரப்பில் முன்வைக்கப்படும் இவ்வாறான கருத்துக்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருப்பதாக அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய அரசியல் தொடர்புகளை மறைப்பதற்கும், இந்த விசாரணைகளை சீர்குலைப்பதற்கும் அவர்கள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கேள்வி: சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உணவு வழங்கப்படவில்லை மற்றும் அவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார் போன்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தால் நிராகரிக்க முடியுமா?
சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த 90 நாட்களும் அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்றால், அவரால் தற்போது இருக்கும் உடல் நிலையில் இருக்க முடியாது. அவருக்கு முதல் நாளிலிருந்து இன்று வரை (90 நாட்களாக) ஒரே சீரான முறையிலேயே உணவு மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த 90 நாட்களிலும் எழாத குற்றச்சாட்டுகள், ஜூன் 3 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னரே திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன.
கேள்வி: அவர் மருத்துவமனையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறதே?
பதில்: அவர் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு தங்கியிருந்து உணவு தவிர்ப்புப் போராட்டம் செய்ய முடியாது.அவருக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவர் விடுதிக்கு (Ward) மாற்றப்பட்டுள்ளார்.
கேள்வி: சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி, சிஐடியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு கம்மன்பில சவால் விடுத்துள்ளார். இதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன?
ஜூன் 3 ஆம் திகதி ஆம் திகதி வரை இவ்வாறான எந்த இரைச்சலும் எழவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்த பின்னரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் குழப்பங்களை விளைவிப்பது, அவர்கள் இந்த குற்றங்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ளார்களோ என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது என அரசாங்கம் கருதுகிறது.
எத்தனை பேர் சேர்ந்து குழப்பங்களை விளைவித்தாலும் அல்லது எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் குழப்பம் செய்வது, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்தக் குற்றங்களுடன் தொடர்புடையவர்களோ என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.
நாட்டின் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட அரசாங்கம் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையின்படி, விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும்.