General30 April 2026

4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன்படி ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 8 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 120 டொலராக உயர்ந்துள்ளது. இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

ஈரான் - அமெரிக்க மோதல்கள் விரைவில் முடிவுக்கு வராது என்பதாலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்ட ட்ரம்ப், "ஈரான் மீதான குண்டுவீச்சை விட, அந்நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிடுவது மிகவும் பயனுள்ளது" என்று வாதிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான போரை மீண்டும் தொடங்கினால், அதன் விளைவுகள் மிகவும் "பாரதூரமானதாக" இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நுகர்வோர் மீதான பாதிப்பைக் குறைக்கும் அதேவேளை, தேவைப்பட்டால் இன்னும் பல மாதங்களுக்கு இந்த முற்றுகையைத் தொடர அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes