International01 May 2026

மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் மிரட்சி!

ஈரான் மீதான போர் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் உச்சத்தை நோக்கி நகர்கின்றன.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 89 காசுகள் அதிகரித்து ஒரு பீப்பாய் 111.29 டொலராக பதிவாகியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு (பெப்ரவரி 28) இது 65 டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் மட்டும் எண்ணெய் விலை 5.7 வீதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்திற்கான ஒப்பந்த விலை ஒரு கட்டத்தில் 126.41 டொலர் வரை சென்றது, இது 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும்.

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ள நிலையில், அமெரிக்கக் கடற்படை ஈரானிய துறைமுகங்கள் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றுமதியை முற்றுகையிட்டுள்ளது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், பேச்சுவார்த்தைகளில் விரைவான முடிவை எதிர்பார்க்க முடியாது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் குறித்து ஈரானை நம்ப முடியாது என ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

இந்த முடக்கம் இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை நீடித்தால், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்றும், பணவீக்கம் கடுமையாக உயரும் என்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் வறுமை மற்றும் கடும் பசிக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதால், அமெரிக்க நுகர்வோரை பாதிப்பிலிருந்து பாதுகாக்க மாற்று வழிகளைக் கண்டறியுமாறு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes