General07 May 2026

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிநாட்டவர் வசம்? - அரசாங்கத்திடம் அவசர விளக்கம் கோரல்

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் உயிரியளவியல் தகவல்களை உள்ளடக்கிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்சங்கம் மற்றும் சிவில் முன்னணியின் அழைப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சமல் சஞ்சீவ நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கை பிரஜைகளின் கைரேகைகள், கண்சுவடு (Iris) மற்றும் இரத்த வகை உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் வசம் ஒப்படைப்பது நாட்டின் பாதுகாப்புக்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

"இன்றைய உலகில் தரவு வர்த்தகம் (Data Trafficking) என்பது ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை விடவும் பாரிய சட்டவிரோத வருமானம் ஈட்டும் துறையாக மாறியுள்ளது. எமது நாட்டு மக்களின் தரவுகள் சர்வதேச தரவுச் சந்தையில் விற்கப்படும் அபாயம் உள்ளது," என அவர் எச்சரித்தார்.

இலங்கையில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு, கருப்புப் பட்டியலில் (Blacklisted) இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனம் ஒன்றிற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றஞ்சாட்டினார்.

40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்த திட்டத்தில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பாரிய தொழில்நுட்பத் திட்டத்தை உள்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கையில் இருக்கும் போது, அவர்களைப் புறக்கணித்து வெளிநாட்டு நிறுவனத்தை நாடுவதன் நோக்கம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எதிர்க்கப்பட்ட அதே திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வது முரணானது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிக்கையை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes