General07 May 2026

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு : தீர்வு காண சர்வதேச உதவியை நாடுகிறது இலங்கை!

பெண்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சைபர் குற்றங்களைக் கண்டறியவும், அவற்றைத் தடுக்கவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஆகியன சர்வதேச தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

2023 ஆம் ஆண்டு 4,103 வழக்குகள் பதிவாகின (அதில் 3,388 இன்னும் தீர்க்கப்படவில்லை).

2024 ஆம் ஆண்டு 3,159 வழக்குகள் பதிவாகின (அதில் 2,177 இன்னும் தீர்க்கப்படவில்லை).

2025 ஆம் ஆண்டு 4,742 வழக்குகள் பதிவாகின (அதில் 4,170 இன்னும் தீர்க்கப்படவில்லை).

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களைத் தடுக்க அரசாங்கம் புதிய பொறிமுறைகளைக் கையாண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Facebook மற்றும் Instagram நிறுவனங்களுடன் இணைந்து, பெண்களை இலக்கு வைக்கும் பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளைக் கண்டறிந்து நீக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பெண்களின் படங்களைச் சிதைத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை முன்கூட்டியே கண்டறிய இது உதவும்.

பதிவாகும் குற்றங்களுடன் ஒப்பிடும்போது, அவை தீர்க்கப்படும் வேகம் மிகவும் குறைவாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதனாலேயே, நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கையாள்வதற்கும் குற்றவாளிகளை விரைவாகக் அடையாளம் காண்பதற்கும் சர்வதேச அமைப்புகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அவசியமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes