General13 June 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட திருத்தத்தால் 100 வரையான கைதிகளுக்கு பிணை: 'சூரியனின் விழுதுகளில்' சட்டத்தரணி தவராசா விபரிப்பு!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சாதகமான திருத்தங்கள் காரணமாக, சுமார் 75 முதல் 100 வரையான கைதிகள் பிணையில் செல்ல முடிந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

'சூரியனின் விழுதுகள்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பிரதான சட்டத்தின் கீழ், நீண்டகாலமாக பிணை வழங்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கவில்லை.

சட்டமா அதிபரின் (நிர்வாகத்துறை) சம்மதம் இருந்தால் மட்டுமே பிணை வழங்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. இதுவே கைதிகள் பல வருடங்களாகச் சிறைகளில் வாடுவதற்குப் பிரதான காரணமாக அமைந்தது.

எனினும், 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலம் இந்த அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கும், மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டது.

முன்னர் 18 மாதங்களாகக் காணப்பட்ட தடுத்து வைக்கும் கால எல்லை, இத்திருத்தத்தின் மூலம் 12 மாதங்களாகக் (ஒரு வருடம்) குறைக்கப்பட்டது.

ஒருவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் பிணை கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், ஒரு வருடக் காலத்திற்குள் விசாரணை நடத்தப்படாமல் தாமதமாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றமே பிணை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டால், வழக்கை இழுத்தடிக்காமல் ஒவ்வொரு நாளும் (Day-to-day) விசாரணை நடத்தி துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இந்தச் சட்டத்திருத்தம் குறித்துப் பேசிய சட்டத்தரணி தவராசா, "இது முழுமையான ஒரு நல்ல சட்டம் என்று நான் கூற வரவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிணை வாய்ப்பை வழங்கும் ஒரு நல்ல திருத்தச் சட்டம்.

இதன் காரணமாகவே இந்தச் சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என தான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டேன்" என மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes