General16 June 2026

டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புனித தலங்களை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: 90 இடங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு

டிட்வா அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள புனித தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டத்தின் கீழ், மேலதிகமாக 90 புனித தலங்களை புனரமைப்பதற்கான நிதியொதுக்கீட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டிட்வா அனர்த்தத்தினால், மொத்தமாக 758 விகாரைகளும், 272 இந்துக் கோயில்களும், 199 முஸ்லிம் பள்ளிவாசல்களும், 99 கிறிஸ்தவ ஆலயங்களும் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

கடந்த 2026.04.27 அன்று எட்டப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா உள்ளடங்கலாக, புத்தசாசன நிதியம், மத்திய கலாசார நிதியம் மற்றும் அநகாரிக தர்மபால மன்றம் ஆகியவற்றின் மூலமாக 800 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட வபுனித தலங்களில் 178 இடங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எஞ்சியுள்ள புனித தலங்களில் மேலும் 90 இடங்களைப் புனரமைப்பதற்காக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 01/2026 ஆம் இலக்க சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய, 129.69 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த 90 வணக்கத்தலங்களின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes