General16 June 2026

EPF மற்றும் ETF நிதியங்களை முத்தரப்புப் பேரவையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றின் அனைத்துப் பணிகளையும் அரசு, தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முத்தரப்புப் பேரவையின் ஒருங்கிணைந்த நிர்வாகப் பணிச்சட்டகத்தின் கீழ்க் கொண்டு வருவதற்கான சாத்தியவளங்களை ஆராய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காகத் தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்தவர்களாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதன் சொத்து மதிப்பு 4.9 ட்ரில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம்.

இதன் பொறுப்பு, முதலீட்டு முகாமைத்துவம், நிதி நிர்வாகம் மற்றும் அங்கத்தவர்களின் அனுகூலங்களைச் செலுத்தும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு உள்ளது.

தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பதிவு செய்தல், இணக்கங்களை வலுவாக்கம் செய்தல், மீதித்தொகையை அறவிடுதல் மற்றும் ஊழியர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தொழில் திணைக்களத்திடம் காணப்படுகின்றது.

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது.

தற்போது 03 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன் சொத்துப் பெறுமதி 637.5 பில்லியன்களுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.

தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முத்தரப்புப் பேரவை ஒன்றின் மூலம் ஏற்கனவே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

சமூகப் பாதுகாப்புக்கு என முத்தரப்பு நிர்வாகமொன்று காணப்படுவது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு சிறந்த நடைமுறையாகும். இது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் ஊக்குவிக்கப்படுகின்ற அடிப்படைக் கோட்பாடாகும்.

இதற்கமைய, அங்கத்தவர்களின் சொத்துக்கள் தொடர்பான முழுமையான சட்ட ரீதியானதும் மற்றும் நிதி ரீதியானதுமான பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதற்காக நியமிக்கப்படவுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் குழு, சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க இரு நிதியங்களினதும் பணிகளை ஒருங்கிணைந்த முத்தரப்புப் பேரவையின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியவளங்களைப் பரிசீலித்து, தமது விதந்துரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes