General23 June 2026

"க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டம் வெறும் கண் துடைப்பு; அரசாங்கம் நாட்டை அல்ல, மக்களின் பணத்தையே சுத்தம் செய்கிறது!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டமானது, பிரபல விளையாட்டு வீரர்களையும் வர்த்தகர்களையும் ஏமாற்றி நடத்தப்படும் வெறும் கண் துடைப்பு நாடகம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் சேற்றில் இறங்கி, விவசாயிகளுக்காக வீதியில் நின்று போராடிய தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று ஆட்சிப் பீடம் ஏறியதும் விவசாயிகளை முற்றிலும் கைவிட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.
"அரசாங்கம் எத்தனை பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.

நெல்லுக்கு நியாயமான விலை வழங்கப்படாமலும், விவசாயிகளுக்குத் தேவையான உரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதனால் இன்று ஒட்டுமொத்த விவசாய சமூகமும் முற்றிலும் அநாதரவாக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது."

நெல் விவசாயம் மட்டுமன்றி, உள்நாட்டுத் தேயிலை மற்றும் காய்கறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உரம் மற்றும் முறையான விலையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய விவசாயக் கொள்கையானது மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை என்றும், அரசாங்கத்திற்கு நெருக்கமான வர்த்தகர்களின் இலாபத்திற்காகவே அவை வகுக்கப்படுகின்றன என்றும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு மிகவும் சுத்தமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் போலியான பிம்பங்கள் காட்டப்பட்டாலும், நிதர்சனம் வேறாக உள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்றில் மிக அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடமே பதிவாகியுள்ளது. பேலியகொட, காலி, மாத்தளை என நாட்டின் எங்குப் பார்த்தாலும் டெங்கு அபாயம் நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுகாதாரச் சீர்கேடுகள் மலிந்துள்ள நிலையில் "க்ளீன் ஶ்ரீலங்கா" என்பது மக்களை ஏமாற்றும் ஒரு போலி நாடகம் எனச் சாடினார்.

நாட்டைச் சுத்தம் செய்கிறோம் எனக் கூறும் அரசாங்கம், உண்மையில் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் இருந்து 3 கொள்கலன்கள்சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு "சுத்தம்" செய்யப்பட்டுள்ளன.

ஹேக்கர் (Hacker) ஒருவரின் ஊடாகத் தவறான கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டு, நிதி அமைச்சின் பணம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கியொன்றின் 13 பில்லியன் ரூபா பணம் தவறான கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது அசுர வேகத்தில் வரிகளை விதித்து, மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் முற்றாகத் துடைத்து அழித்து வருகிறது.

உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் மக்களின் வயிற்றையும் அடித்துவிட்டு அரசாங்கம் காட்டும் இந்த "க்ளீன் ஸ்ரீ லங்கா" என்ற பிம்பம், வெறும் போலித் திரை மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes