General06 July 2026

சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு: சஜித் சாடல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (06) விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மையே இந்த உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் முதன்மைக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, சிறைச்சாலைகளுக்குள் மரணங்கள் சம்பவித்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியிருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அதே கொள்கை தற்போதைய நிர்வாகத்திற்கும் பொருந்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் வாக்குறுதியளித்த "அமைப்பில் மாற்றம்" (System Change) தோல்வியடைந்துள்ளதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.

அத்துடன், நாட்டின் ஆட்சி நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை முகாமைத்துவம் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை இந்த சம்பவம் வெப்படுத்துகிறது.

அரசாங்கத்திற்குச் சாதகமான அறிக்கையைத் தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்படும் குழுக்களைத் தவிர்த்து, இந்த சம்பவம் குறித்து நியாயமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கைப் பேணவும், மனிதாபிமானமிக்க சிறைச்சாலை நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திற்குத் தகுதி உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இதற்கான பதில்களைப் பெற்றுக்கொள்ளப் பொதுமக்களுக்கு உரிமையுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, தேசிய பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலை முகாமைத்துவம் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes