International11 July 2026

நடுவானில் கழன்ற வானூர்தி ஜன்னல்: பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய பயணி!

தெசலோனிகியிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கிப் புறப்பட்ட மோல்டா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான வானூர்தி, நடுவானில் ஜன்னல் கழன்று விழுந்ததால் மீண்டும் கிரீஸிற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.

நேற்று (10) வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜன்னல் ஒன்று கழன்று விழுந்தது. இதனால் வானூர்தியின் உட்புற அழுத்தம் திடீரென குறைந்து, ஒக்சிஜன் முகமூடிகள் தானாகச் செயல்படத் தொடங்கின.

இந்தச் சம்பவத்தின் போது, 60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலைகீழாகத் தொங்கியுள்ளார். அவரைச் சக பயணிகள் விரைந்து செயல்பட்டு மீண்டும் உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகளைத் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல மாற்று வானூர்தி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அயர்லாந்து வானூர்திப் போக்குவரத்து ஆணையம், கிரேக்க மற்றும் மால்டா வானூர்திப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜன்னல் கழன்றதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes