Sports02 July 2026

நெஞ்சை பதறவைத்த கூடுதல் நேரம்: செனகலை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி!

கால்பந்து கிண்ணத் தொடரின் '32 அணிகளுக்கான 'சுற்றில், செனகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி கூடுதல் ஆட்டநேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சியாட்டல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் செனகல் அணியின் எச். தியாரா (H. Diarra) 25ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியின் 51ஆவது நிமிடத்தில் ஐ. சார் (I. Sarr) மேலும் ஒரு கோல் அடிக்க, செனகல் 2-0 என வலுவான நிலையை எட்டியது.

போட்டி பெல்ஜியத்தின் கையை விட்டுப் போய்விட்டது என்று கருதப்பட்ட நிலையில், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் பெல்ஜியம் அசாத்தியமாக மீண்டெழுந்து 86ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு (R. Lukaku) முதல் கோலை அடிக்க, அடுத்த 3 நிமிடங்களில் (89') யூரி திலெமான்ஸ் (Y. Tielemans) இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் ஆட்டநேரம் வழங்கப்பட்டது.

கூடுதல் ஆட்டநேரத்தின் போதும் இரு அணிகளும் கடுமையாகப் போராடியதால் ஆட்டம் பெனால்டி சூட்-அவுட் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கூடுதல் ஆட்டநேரத்தின் இழப்பீட்டு நிமிடத்தில் (120'+5') பெல்ஜியம் அணிக்குக் கிடைத்த பெனால்டி (Penalty) வாய்ப்பை யூரி திலெமான்ஸ் மிகத் துல்லியமாகக் கோலாக மாற்றி பெல்ஜியத்தின் 3-2 என்ற வெற்றியை உறுதி செய்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes