General01 May 2026

"முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்" - ஜனாதிபதி அநுரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பகிரங்க சவால்!

தற்போதைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் பின்வாங்குவதாக குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் மேதினக்கூட்டம் இன்று கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் “உருட்டு பிரட்டு திருட்டு” என்னும் தொனிப்பொருளில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், சதிகாரர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

ரணில் விக்ரமசிங்க தமது கூட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர் , ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கால நோக்குள்ள ஒரு பலமான கட்சி எனவும் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் புதிய திருடர்கள் உருவாக்கப்படுவதாகவும், மாணவர்கள் மத்தியில் ஆபாசப் படங்கள் பார்க்கும் கலாசாரம் அதிகரித்துள்ளமை கவலைக்குரியது எனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சமூகச் சீரழிவுகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

இதன் அடுத்த கட்டமாக, வரும் காலங்களில் மாவட்ட மட்டத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி, அடிமட்டத் தொண்டர்களை ஒன்றிணைக்கத் தீர்மானித்துள்ளதாக இதன் போது தெரிவித்தார்.

மக்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த மே தினக் கூட்டமானது, எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான ஒரு ஆரம்பம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes