International05 June 2026

தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!

ஆபிரிக்காவின் இறுதிப் பெருங்குடி உயிர் வலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிழக்கு அங்கோலாவின் (Angola) பீடபூமியான 'லிசிமா' (Lisima plateau) பகுதியில் நடத்தப்பட்ட விசேட அறிவியல் ஆய்வுப் பயணத்தின் போது, இதுவரை உலகிற்குத் தெரியாத பல்வேறு கணக்கான புதிய விசித்திர உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நேற்று முன் தினம்(03) அதிரடியாக அறிவித்துள்ளனர்.

கொங்கோ, ஜாம்பேசி மற்றும் ஒகவாங்கோ உள்ளிட்ட ஆபிரிக்காவின் பிரதான நதி அமைப்புகளுக்கு நீர் வழங்கும் இந்த லிசிமா பீடபூமியானது, கடந்த 2002 ஆம் ஆண்டு நிறைவடைந்த 27 ஆண்டுகால கொடூர உள்நாட்டுப் போர் மற்றும் அடர்ந்த புவியியல் அமைப்பு காரணமாகப் பல தசாப்தங்களாக அறிவியல் உலகினால் ஆராயப்படாமல் ஒரு ரகசிய பூமியாகவே மறைந்திருந்தது.

விஞ்ஞானி ஸ்டீவ் போயஸ் (Steve Boyes) என்பவரால் நிறுவப்பட்ட 'தி வைல்டர்னஸ் புராஜெக்ட்' (The Wilderness Project) அமைப்பின் 16 சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கடந்த பெப்ரவரி மாத மழைக் காலத்தில் 'கசாய் லைஃப் அட்லஸ்' (Cassai Life Atlas) என்ற பெயரில் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்விலேயே இந்த விசித்திர மர்மங்கள் அம்பலமாகியுள்ளன.

இதில் கண்டறியப்பட்ட உயிரினங்களில், புற ஊதா (UV) ஒளியின் கீழ் நீல நிறத்தில் பிரகாசமாக ஒளிரும் 'கிரீட நண்டு சிலந்தி' (Crowned crab spider) மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த வண்டுகளைப் போலப் போலி வேடமிட்டுத் திரியும் 'லேடிபேர்ட் வெப் சிலந்தி' ஆகியன உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இது தவிர 8 புதிய வகை தட்டாரப்பூச்சிகள் (Dragonflies) மற்றும் 8 விசித்திர அந்துப்பூச்சிகள் (Moths) உட்படப் பல புதிய பூச்சியினங்கள் இங்கு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு (2025) ஒக்டோபரில் சர்வதேச 'ராம்சர்' (Ramsar) அமைப்பினால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த 'லிசிமா லியா முவோனோ' (உயிரின் பிறப்பிடம்) வலயத்தின் இயற்கை வளங்களை சுரங்கத் தொழில், காடழிப்பு மற்றும் காட்டுத்தீ போன்ற பேராபத்துகளில் இருந்து பாதுகாப்பதே தங்களது இறுதி இலக்கு எனப் பயணத் தலைவர் ராப் டெய்லர் (Rob Taylor) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes