General10 June 2026

சங்கீத்ஷன் விடுதலை விவகாரம்: ஜனாதிபதி அநுர குமார - சிறீதரன் எம்.பி இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்ஷனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையில் முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின்போது, சங்கீத்ஷன் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதால், சாதாரண நீதிமன்ற நடைமுறையின் கீழ் அவருக்கான பிணை கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறீதரன் எம்.பிக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோருக்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த சந்திப்பின்போது, சங்கீத்ஷனின் சட்டநிலை மற்றும் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சர் சந்திரசேகர், சங்கீத்ஷனின் தாயாருடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

சங்கீத்ஷனின் கைது மற்றும் விடுதலை விவகாரம் தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு விளக்கமளித்திருப்பது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes