General11 June 2026

தமிழரசுக் கட்சியால் உயிருக்கு அச்சுறுத்தல்: அவசர பாதுகாப்பு கோருகிறார் அர்ச்சுனா!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ஒரு மக்கள் பிரதிநிதியாகப் பொதுமக்களைச் சந்திப்பதில் தனக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தனது பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது, சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய போதே அவர் இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினாலும், சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாலும் தனக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நாடாளுமன்றத்துக்கு வருவதிலும், தொகுதி மக்களை நேரில் சந்திப்பதிலும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது குறித்து தான் சபையில் தொடர்ச்சியாகப் பேசிய போதிலும், அதிகாரிகள் தரப்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ துப்பாக்கி தொடர்பிலும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், தான் அந்தத் துப்பாக்கியை ஒருபோதும் முறையற்ற வகையில் பயன்படுத்தியதில்லை.

தமக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து நாடாளுமன்றம் உடனடியாகத் தலையிட்டு, முறையான மற்றும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes