General11 June 2026

"முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் சலேவுக்காக பௌத்த பிக்குகளான நாம் குரல் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" - ஞானசார தேரர்

ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்காக, பௌத்த துறவிகளாகிய தாங்கள் இன்று முன்னின்று குரல் கொடுக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்த விசேட கடிதமொன்றைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"நாம் முஸ்லிம் சமூகத்தை நேசிக்கிறோம், ஆனால் முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். ஒரு பௌத்த துறவி என்ற ரீதியில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் புலனாய்வுப் சேவையின் முன்னாள் பிரதான சுரேஸ் சலேவுக்காக இன்று முன்னின்று குரல் கொடுக்கக் கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

அவர் ஒரு முஸ்லிம் என்பதற்காக அவரை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், நாட்டின் பாதுகாப்பைப் பேண வேண்டும் என்பதே அவரது இறுதி நோக்கமாக இருந்தது. அதனை நாம் மதிக்க வேண்டும். எவராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை” என்றார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தை வைத்துக்கொண்டு, அதன் உண்மைப் பின்னணியை மூடிமறைப்பதற்காகப் பல்வேறு அரசியல் தரப்பினரும் ஒரு பொக்ஸிங் போட்டி போல இரு பிரிவாகப் பிரிந்து அரசியல் செய்வதாகவும், இந்த அரசியல்மயமாக்கல் நாட்டிற்குப் பெரும் அழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் இவ்வாறான அரசியல் சதிவலைகளுக்குள் சிக்கி, நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளிவிடக் கூடாது எனவும் ஞானசார தேரர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes