General11 June 2026

அரசாங்க அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய பதப்படுத்தப்பட்ட மீன் தொழிற்சாலை முற்றுகை

இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி ஆராச்சிகட்டு பகுதியில் இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்தித் தொழிற்சாலையொன்று இன்று ( 11) முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் முறையான பதிவு மற்றும் அனுமதியின்றி உற்பத்தி செய்யப்பட்டு, பொதியிடப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த தயாரிப்புகள் நிறுவப்பட்ட தரநிலைகளை மீறி உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் ஏனைய பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, SLSI தரச்சான்றிதழ், உற்பத்தித் தரநிலைகள் மற்றும் துல்லியமான விபரங்களைச் சரிபார்த்து, அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்து, அலுவலக நேரங்களில் '1977' என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தெரியப்படுத்துமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes