General13 June 2026

கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை: கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் காற்று வீசுவதுடன், கடல் பகுதிகள் கணிசமான அளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர அறிவிப்பு, நாளை முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையிலான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மறுஅறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். இப்பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களும் கடற்படையினரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை ஒட்டிய கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 மீட்டர் முதல் 2.5 மீட்டர் (2.0 - 2.5m) வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes