அமெரிக்காவின் 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி நிறுவனம் பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் உலகின் முதலாவது ட்ரில்லியனராக புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அண்மைய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக அறிமுகமாக (IPO) கருதப்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, நேற்று வர்த்தகத்தின் போது பாரியளவில் உயர்ந்ததே இதற்குக் காரணமாகும்.
புளூம்பெர்க் (Bloomberg) பணக்காரர்கள் பட்டியலின்படி, ஈலோன் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 1.11 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதன் மூலம் உலகின் பெரும் பணக்காரர் என்ற தனது அந்தஸ்தை அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
விண்வெளி, தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் தடம் பதித்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாஸ்டாக் (Nasdaq) பங்குச்சந்தையில் 2.2 ட்ரில்லியன் டொலர் சந்தை மதிப்புடன் பட்டியலிடப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு பங்கின் விலை 135 டொலராக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், வர்த்தகம் தொடங்கிய போது 150 டொலராக உயர்ந்தது.
முதலீட்டாளர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில், வர்த்தகத்தின் போது ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 176.50 டொலர் வரை சென்று, இறுதியில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 161 டொலராக நிலைபெற்றது.
இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்கள் மற்றும் பொறுப்புறுதியாளர்களிடமிருந்து (Underwriters) 75 பில்லியன் டொலர்களைத் திரட்டியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் ஈலோன் மஸ்க்கிற்கு 42 சதவீத பங்குகள் உள்ளதால், நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் அவரிடமே உள்ளது. முதலீடு செய்யப்படும் நிதியை அவர் தனது விருப்பப்படி பயன்படுத்த முடியும்.
ஈலோன் மஸ்க்கின் இந்த அசாத்திய சொத்து மதிப்பானது, போலந்து அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்கு நிகரானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியனராக உருவெடுத்துள்ளமை உலகளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, உலகளாவிய பொருளாதார ரீதியிலான சமத்துவமின்மை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதிவேகமாக உயர்ந்து வரும் இந்த சொத்து மதிப்பு, உலக அரசியலில் அவரை ஒரு செல்வாக்கு மிக்கவராகவும் அதேநேரம் விமர்சனத்திற்குரியவராகவும் மாற்றியுள்ளது.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை மஸ்க் நிதியுதவியாக வழங்கியிருந்தார்.
அத்துடன், கடந்த ஆண்டில் சில மாதங்கள் அவர் அமெரிக்காவின் 'அரசாங்க செயல்திறன் துறைக்கு' (Doge) தலைமை தாங்கினார்.
அரச செலவினங்களைக் குறைக்கும் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (USAID) மூடப்பட்டது.
இந்த நிதியொதுக்கீடு குறைப்பு நடவடிக்கைகளால், 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் மேலும் 14 மில்லியனுக்கும் அதிகமான மரணங்கள் ஏற்படக்கூடும் என 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தவிர, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளின் தலைமைத்துவங்களையும், குடியேற்றம் மற்றும் இனப் பிரிவினைகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகளையும் ஈலோன் மஸ்க் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!
Local
13 June 2026
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026