General16 June 2026

ஹேக்கர்கள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டால் ஹர்ஷ டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படுவார்: ஆளுந்தரப்பு அச்சுறுத்துவதாக அஜித் பி. பெரேரா அம்பலம்

நாடாளுமன்ற அரச நிதி விவகாரங்கள் பற்றிய குழுவிற்குள் (COPF) செயற்பட்ட ஹேக்கர்கள் தொடர்பான விசாரணைகளின் காணொளி பதிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட்டால், அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுந்தரப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (15) ஒளிபரப்பான "ஹிரு சலகுண" அரசியல் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரை அழைத்து, நிதி மோசடிகள் மற்றும் டொலர் நெருக்கடி குறித்து அரச நிதி விவகாரங்கள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த இறுதிக்கட்ட இரண்டு கூட்டங்களின் காணொளி பதிவுகள், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த அழுத்தங்கள் காரணமாகவே ஊடகங்களுக்கு வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அஜித் பி. பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை காலம் இக்குழுவின் கலந்துரையாடல்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்த போதிலும், தற்போது ஆளுந்தரப்பினர் திட்டமிட்டு இதனைத் தடுத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிலும் நிலக்கரி மோசடியை அம்பலப்படுத்தி பரிந்துரைகளை முன்வைத்த போது, ஹர்ஷ டி சில்வாவின் தலைவர் பதவியை பறிக்க அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தற்போதைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், "முடிந்தால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள்" என ஹர்ஷ டி சில்வா நேரடியாக சவாலிட்டுள்ளார். நாட்டின் நிதி நிர்வாகச் சீர்கேடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளதால், வழமை போன்று இந்த காணொளிகளை உடனடியாக வெளியிடுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த மத்திய வங்கி ஆளுநர், சீன நாணயம் உட்பட தற்போதுள்ள 6.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு ஓரளவு போதுமானதாக இருந்தாலும், எதிர்கால இலக்குகளை அடைய அரசாங்கம் இந்த நிதியை மேலும் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையிலுள்ள பல நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, எவ்வித பொருட்களையும் நாட்டிற்குள் கொண்டுவராமல் சட்டவிரோதமான முறையில் டொலர்களை வௌிநாடுகளுக்கு கடத்தும் மோசடியை காவல்துறையினரும் சுங்கப்பிரிவினரும் கண்டறிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

'நெக்ஸ்ட் ஜென்' நிறுவனம் மாத்திரம் 953 சந்தர்ப்பங்களில் 1,289 கோடி ரூபா (42.7 மில்லியன் டொலர்) பணத்தை 26 வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி நாட்டிலிருந்து டொலர்களைக் கடத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை, தேசிய அபிவிருத்தி வங்கியின் 13.2 பில்லியன் ரூபாய் நிதி மோசடியுடன் தொடர்புடைய பணமும் இதே முறையிலேயே மிகக் குறுகிய காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக மேலும் 43 மில்லியன் டொலர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளன.

மோசடிக்காரர்கள் மத்திய வங்கி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கூறினாலும், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான இவ்வாறான நிதி மோசடிகள் பல வருடங்களாக இடம்பெறும் வரை அதனைத் தடுக்க முடியாமல் போனமையானது, மத்திய வங்கியின் கண்காணிப்பு நடவடிக்கை மிகவும் பலவீனமான மட்டத்தில் உள்ளதையே காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes