International19 June 2026

நைஜரில் உள்ள மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு

நைஜர் நாட்டின் மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் இந்த இடத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் குறித்து பொதுமக்கள் பிபிசி செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் காலை நேர பிரார்த்தனைகளை முடித்த உடனேயே, தலைநகரான நியாமி இல் அமைந்துள்ள தியோரி ஹமானி சர்வதேச வானூர்தி நிலையப் பகுதியிலிருந்து வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வதிரடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 22 தாக்குதல்தாரிகள், 11 இராணுவத்தினர் மற்றும் இரண்டு பொதுமக்கள் அடங்குவதாக நைஜர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அல்-கொய்தா அமைப்போடு தொடர்புடைய 'ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் என்ற குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நைஜர் நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதமும் இதே வானூர்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய அமைப்பொன்று பொறுப்பேற்றிருந்தது.

இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கண்டறிவதற்காக பாதுகாப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த 22 தாக்குதல்தாரிகளைத் தவிர, மேலும் நால்வர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes