General20 June 2026

காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளுக்கு விரைவில் முடிவு: அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதோடு, அவர்களது வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒரு முடிவைக் காண வேண்டியது அவசியம் என, நீதித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலையீடுகள் காரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மற்றும் கடந்த அரசுகளின் செயற்பாடுகள் குறித்து மக்களிடம் வேதனையும் அதிருப்தியும் இருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசுகள் இந்த விசாரணைகளை நிறைவு செய்ய போதிய அக்கறை காட்டாமையால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கும் தெற்கும் முப்பது ஆண்டுகால யுத்தத்தால் பெரும் துயரங்களை அனுபவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனி ஒருபோதும் அவ்வாறான நிலை உருவாகக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதற்காக நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கில் நிலங்கள் விடுவிக்கும் பணிகளும் வீதி திறப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற உணர்வை இனி ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes