General21 June 2026

இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளாக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து!

நாட்டின் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், அரசியலமைப்பின் 3ஆம் அத்தியாயத்திலுள்ள அடிப்படை உரிமைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஹுஸ்ம’ (மூச்சு) திட்டத்தின் 77ஆவது கட்டமாக, கண்டி தேசிய மருத்துவமனைக்கு 48 இலட்சம் ரூபா பெறுமதியான ஹீமோ டயாலிசிஸ் (Hemo Dialysis) இயந்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வில் இன்று (21) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசியலமைப்பின் 6ஆம் அத்தியாயத்திலுள்ள சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை பிரஜைகளால் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது. எனவே, இவற்றை 3ஆம் அத்தியாயத்தில் உள்ளீர்த்து, நீதிமன்றத்தால் பாதுகாக்கப்படக்கூடிய அடிப்படை உரிமைகளாக புதுப்பிக்க வேண்டும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே எடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கண்டி மாவட்ட ஐக்கிய இளைஞர் சக்தியினரால் இந்த மருத்துவ உபகரணம் சமூகப் பொறுப்புடன் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி வெறும் பேச்சோடு மட்டுமன்றி, செயலாலும் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான முதலீடான ‘ஹுஸ்ம’ திட்டத்திற்காக இதுவரை 2,388 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் இலவசக் கல்வியை வலுப்படுத்த இதுவரை 4,342 இலட்சம் ரூபா செலவில் 89 பாடசாலை பேருந்துகளும், 4,310 இலட்சம் ரூபா செலவில் 386 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறை (smart class room) தொகுதிகளும் எமது நிதியொதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

அதிகாரத்தில் இல்லாத போதும், கட்சிக்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு எமது பிம்பங்களை உருவாக்காமல், நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் உண்மையான ‘முறைமை மாற்றத்தையே’ நாம் நிகழ்த்திக்காட்டி வருகிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes