General22 June 2026

இலங்கை - தமிழக கடல்வழியில் ஊடுருவல் அபாயம்!

இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் சுமார் 38 கிலோமீற்றர் மாத்திரமாகும்.இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 6ஆம் மணல் திட்டையுடன் இந்திய எல்லை முடிவடைகிறது.

இந்த குறுகிய கடல் எல்லைப் பகுதி வழியாக இருநாட்டு கடத்தல்காரர்களும் தடையின்றி ஊடுருவும் சூழல் காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

முன்னதாக, கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன.

எனினும், கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் போதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் இந்த கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறை உடைந்து கிடப்பதுடன், ஒரு காவல்துறை அதிகாரி கூட பணியில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் காரணமாக கடல் வழியிலான கடத்தல்களும் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள அரசாங்கம் இந்த சோதனைச் சாவடிகளுக்கு உடனடியாக காவல்துறையினரை நியமித்து கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes