General22 June 2026

அமெரிக்க - ஈரான் முதல் நாள் பேச்சுவார்த்தை நிறைவு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாம் நாள் உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் நிறைவடைந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்துவத்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நிலவிய போதிலும் முக்கிய பிராந்திய மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்காத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து கடுமையான அச்சுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

லெபனானில் அதிக ஊதியம் கொடுத்து இயக்கப்படும் தங்களது ஆதரவுப் படைகளின் வன்முறைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தவறினால் கடந்த வாரத்தை விடவும் மிகக் கடுமையான தாக்குதல்களை ஈரான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் தனது எக்ஸ் (X) தளத்தில் நேரடிப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களைத் தங்களது நாடு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தப் பேச்சுவார்த்தையின் முதலாம் நாள் அமர்வில் லெபனான் விவகாரம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இருநாட்டு அதிகாரிகளும் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதிச் சொத்துக்களை விடுவிப்பது மற்றும் மசகு எண்ணெய் வர்த்தகம் மீதான அமெரிக்காவின் தடைகளில் இருந்து தற்காலிக சலுகைகளைப் பெறுவது குறித்தும் இருதரப்பும் விரிவாக விவாதித்துள்ளதாக ஈரானிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் போதிலும், மறுபுறம் களத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

தெற்கு லெபனானில் உள்ள போஃபர்ட் கோட்டை (Beaufort Castle) பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் எக்காரணம் கொண்டும் பின்வாங்காது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

அதேவேளை, காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.%MCEPASTEBIN%
Related recommendation
Hiru TV News | Programmes