General27 June 2026

பிலியந்தலையில் சோகம்: 16 வயது பாடசாலை மாணவர்கள் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்!

பிலியந்தலை, மகுளுதூவ பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, நிவந்திடிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முன்னால் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோதே, உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் தாக்கத்தினால் உந்துருளியின் முன்பக்க சக்கரம் மற்றும் பல பாகங்கள் உடைந்து தனியாகக் கழன்று வீசப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவரிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இருந்திருக்கவில்லை என்பதுடன், பின்னால் பயணித்து படுகாயமடைந்த மாணவர் தலைக்கவசம் (Helmet) அணிந்திருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உந்துருளியின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மாணவர் கடுமையான காயங்களுடன் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியை ஓட்டிச் சென்ற மாணவர் பிலியந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் குறித்து பிலியந்தலை காவல்துறையிளர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related recommendation
Hiru TV News | Programmes