General28 June 2026

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு: கல்வி அமைச்சு முழுத்தயார்

2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கென ஐந்து முக்கிய அம்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றைச் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமாக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2026ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புகள் தற்போது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக 6ஆம் தரத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, 6ஆம் தரத்துக்கான முதலாம் தவணைக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.

இவை இரண்டாம் தவணை பாடப்புத்தகங்களுடன் இணைந்து, உரிய நேரத்தில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

நாட்டின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 6,500 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், அபிவிருத்தி தேவைப்படும் 373 பாடசாலைகளைத் தரமுயர்த்தும் பணிகளும் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes