General09 July 2026

ஆண்டின் இறுதிக்குள் தனியார் துறை கடன் வளர்ச்சி பாதியாகும்? – ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

இலங்கையின் தனியார் துறை கடன் வளர்ச்சி ஏப்ரல் மாதத்தில் 27.0% என்ற வலுவான மட்டத்தைப் பதிவு செய்திருந்த போதிலும், ஆண்டின் இறுதிக்குள் இந்த வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைய வாய்ப்புள்ளதாக 'ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச்' (First Capital Research ) தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2026 இல் தனியார் துறை கடன் வளர்ச்சி 27.0% ஆக இருந்தது.

இதன்போது நிலுவையில் உள்ள கடன் தொகை முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 100.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்து, 10.8 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

பணவியல் கொள்கை இறுக்கம் மற்றும் கடன் தேவை குறைதல் என்பன தனியார் துறை கடன் வளர்ச்சியைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நெருக்கடியின் பொருளாதார தாக்கம், வாகன இறக்குமதிக்கான 50.0% கூடுதல் வரி மற்றும் கடுமையான கடன் வரம்புகள் காரணமாக கடன் வழங்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.

2025 இல் பதிவான 25.2% வலுவான கடன் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டிற்கான கடன் வளர்ச்சி 15.0% ஆகவும், 2027 ஆம் ஆண்டிற்கு 12.0% ஆகவும் குறையும் என எப்.சி.ஆர் மதிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் முதல் மே 2026 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் பணப்புழக்கம் சராசரியாக 170.0 பில்லியன் ரூபாவாக இருந்தது.

இது ஆண்டின் முற்பகுதியில் காணப்பட்ட 300.0 பில்லியன் ரூபாயை விடக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். அண்மைய வாரங்களில் இது 50.0 பில்லியன் ரூபாவுக்கும் கீழாகச் சரிந்துள்ளது.

இறக்குமதி அதிகரிப்பு மற்றும் தனியார் துறை கடன் விரிவாக்கம் காரணமாக ரூபாயின் பெறுமதியைப் பாதுகாப்பதற்காக, இலங்கை மத்திய வங்கி தொடர்ச்சியாக அமெரிக்க டொலர்களை விற்பனை செய்தமையே இந்தத் திடீர் வீழ்ச்சிக்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், கடன் வளர்ச்சி மெதுவடைதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுதல் ஆகியவற்றால், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் பணப்புழக்கம் மீண்டும் 100.0 பில்லியன் ரூபாவுக்கு மேல் சீராகும் என இந்த ஆய்வு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes