General23 July 2026

காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!

காவல்துறை அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, காவல்துறையினரின் புகைப்படங்களுடன் கூடிய போலி கணக்குகளை உருவாக்கிக் குழுக்களாகச் செயற்படும் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகத் காவல்துறைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சில சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது காவல்துறையின் விசாரணைப் பிரிவுகளில் இருந்து பேசுவதாகக் கூறி நிலையான அல்லது தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்தல்.

அறியப்படாத பகுதியில் இருந்து வங்கிக் அட்டை பெறப்பட்டு கொடுப்பனவுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் பணமோசடிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வழக்குத் தொடரப்படும் என அச்சுறுத்துதல்.

இரகசிய விசாரணை ஒன்று நடத்தப்படுவதாகக் கூறி, அதற்கு உதவி செய்தால் விடுவிப்பதாகக் குறிப்பிட்டு வட்ஸ்அப் ஊடாக போலி காவல்துறை அடையாளச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் படங்களை அனுப்புதல்.

'Verification' (சரிபார்ப்பு) பணிகளுக்காக முடக்கப்பட்ட (Freeze) கணக்குகளை விடுவிக்கக் கோரி வங்கிக் கணக்குகளில் உள்நுழைவதற்காக OTP இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல், வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறு பணித்தல் அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்கள் ஊடாகப் பணத்தைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கேட்பதில்லை என்பதால், இத்தகைய தகவல்களைக் கோரும் அழைப்புகள் மோசடியானவை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்குத் தொடரப்படும் போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் காவல்துறை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை மத்திய வங்கி ஆகியவை எப்போதுமே தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை என்பதுடன், வங்கிக் கணக்கு இலக்கங்களை வழங்கிப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோருவதும் கிடையாது. உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எழுத்துமூலமாகவே வழங்கப்படும் என்பதுடன், அவசியமான சந்தர்ப்பங்களில் சீருடை அணிந்த அதிகாரிகளே வருகை தருவார்கள்.

வட்ஸ்அப் அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக இத்தகைய போலி ஆவணங்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அறியாத நபர்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம் வெளியிடப்படும் இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப் பயன்பாடுகளில் இருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறையினர் எத்தகைய விசாரணைகளுக்காகவும் பொதுமக்களிடம் பணம் அறவிடுவதில்லை என காவல்துறை தலைமையகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எனவே, காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்தோ அல்லது விசாரணைகளுக்காக எனக் கூறியோ பணம் பெற முயற்சிக்கும் மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் குறித்துக் கீழ்க்கண்ட கணினி குற்ற விசாரணை பிரிவின் இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்: 071 - 8592918

கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 - 8591765

கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 - 2300756

இதுபோன்ற மோசடிகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரடியாகச் சென்று எழுத்துமூலம் முறைப்பாடு செய்யும் வசதியும் காணப்படுவதாகக் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes