General29 August 2026

கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகளை விரைவுபடுத்த பணிப்புரை!

கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி, அதன் நன்மைகளை விரைவில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றத்தை ஆராய்வதற்காக இன்று காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த் திட்டத்தின் பணிகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டிற்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முழுமையாக உள்நாட்டு நிதியின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களை இணைக்கும் வகையில் தந்திரிமலை போகொட பகுதியில் மல்வத்து ஓயாவுக்கு குறுக்காக நிர்மாணிக்கப்படும் நீர்த்தேக்கம், 169,400 ஏக்கர் அடி நீர் கொள்ளளவைக் கொண்டு வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக அமையவுள்ளது.

அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், விவசாயம், கிராமிய அபிவிருத்தி, நீர்மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, சுற்றுலாத்துறை மற்றும் நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்துதல் என்பன இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள், 3.4 கிலோமீற்றர் நீளமான பிரதான அணைக்கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், தெற்கு கரையின் நீர்வாய்க்கால் கட்டமைப்புப் பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீர்மின் நிலையத்துக்கான அடித்தளப் பணிகள், யானை வேலி அமைத்தல், சிறிய நீர்த்தேக்கங்களைப் புனரமைத்தல் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் நிறைவடையும் போது, மன்னார் மாவட்டத்தில் சிறுபோக பருவத்திலும் 40,000 ஏக்கர் வயல் நிலங்களில் முழுமையாகப் பயிர் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, திட்டத்தினால் இடம்பெயரும் 315 குடும்பங்களுக்குக் காணி, மின்சாரம், குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குமாறும், சூரிய மின்சக்தி நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தி அவர்களை நவீன விவசாயத்தில் ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes