General03 September 2026

கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!

அரசின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ முற்றாக நிராகரித்துள்ளார்.

உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், இந்த அதிகரிப்புக்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரவுகள் பிழையானவை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக மூலங்களில் பெறப்பட்ட கடன் விபரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னரும் செய்திகளைப் பிரசுரிப்பதற்கு முன்னரும் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசின் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes