Sports22 June 2026

உருகுவே - கேப் வேர்ட் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

கால்பந்து கிண்ணத் தொடரின் 'H' பிரிவு லீக் ஆட்டமொன்றில் உருகுவே மற்றும் கேப் வேர்ட்(Cape Verde) அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் கேப் வேர்ட் அணியின் கெவின் பினா (Kevin Pina) முதல் கோலை அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய உருகுவே அணி, முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை விளாசியது.

இதன்படி, போட்டியின் 44 ஆவது நிமிடத்தில் எம். அரவுஜோ (M. Araújo) ஒரு கோலையும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45'+6 நிமிடத்தில்) எம். அரவுஜோவின் உதவியுடன் ஏ. கனோபியோ (A. Canobbio) மற்றொரு கோலையும் அடித்தனர்.

இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் உருகுவே அணி 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேப் வெர்டே அணி சமநிலையை எட்டுவதற்காகப் போராடியது.

இதன் பலனாக போட்டியின் 61 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஹெலியோ வரேலா (Hélio Varela) ஒரு சிறப்பான கோலை அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

இதன் பின்னர் ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes