General23 June 2026

2029-இல் மாறப்போகும் இலங்கை டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டம்

இலங்கையில் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மேலும் 400 மில்லியன் யென் (¥400 million) மேலதிக மானியத்தை வழங்கவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் (ERD) ஆகியவற்றிற்கு இடையே கடந்த ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கையின் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையை 2029ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாகத் தொடங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவடைந்ததும், புதிய டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாடு தழுவிய பிரச்சாரங்களுக்கு இந்த மேலதிக JICA மானியம் பயன்படுத்தப்படும்.

குறித்த திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஆதரவாக ஒரு தனித்துவமான தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எஞ்சியுள்ள கட்டுமான மற்றும் தொழில்நுட்ப பணிகளை தாமதமின்றி விரைவுபடுத்துவதற்கு தேவையான நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), டிஜிட்டல் டிவி திட்ட பிரதிநிதிகள், நிதி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes