General24 June 2026

அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்; இரு நாடுகளும் முரண்பட்ட கருத்து

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இரு நாடுகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையில் இனி எந்தவிதமான மேலதிக கடற்படை முற்றுகையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தமது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலேயே தொடரும் என்றும், தேவையெனில் நடவடிக்கை எடுப்பதற்கு கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு பயணிக்கும் கப்பல்கள் ஈரானின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஈரானுக்கான சில நிதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறினாலும், அவை கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அணுசக்தி ஆய்வாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், குண்டுவீச்சுக்கு இலக்கான அணு நிலையங்களுக்கு ஐக்கிய நாடுகள் ஆய்வாளர்கள் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்ட அமுலாக்கமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை என ஈரான் வலியுறுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் விளக்கங்களை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes