General24 June 2026

VAT, சமூக பாதுகாப்பு வரி வரம்பில் மாற்றமில்லை; புதிய அறிவிப்பு!

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவற்றிற்கான வருடாந்த வரம்பை 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கும் யோசனை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனை அறிவித்துள்ளார்.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகளுக்காக தற்போது நடைமுறையில் உள்ள 60 மில்லியன் ரூபாய் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகளுக்கான வரம்பை 36 மில்லியன் ரூபாயாகக் குறைப்பது தொடர்பாக நிதிக்குழுவில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தேவையான அளவில் தயார்படுத்தப்பட வேண்டியிருப்பதுடன், வரி அறவீட்டுக்கான பொருத்தமான நடைமுறைகள் மற்றும் உத்திகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், தற்போதைய சூழ்நிலையில் இந்த மாற்றத்தை அமல்படுத்துவது பொருத்தமற்றது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமா அதிபரின் அனுமதியும் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போதைய 60 மில்லியன் ரூபாய் வருடாந்த வரம்பை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes