General20 September 2025

தந்தையின் இழப்பை மனவலிமையால் சமாளித்து மீண்டும் களம் திரும்பும் துனித் வெல்லாலகேவின் கதை

இலங்கை அணியின் நட்சத்திர வீரராக அண்மைக் காலமாக ஜொலித்து வருபவர் துனித் வெல்லாலகே. 
 
அவர் தனது கிரிக்கெட் பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். 
 
துனித் வெல்லாலகே 2003ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி பிறந்தார். 
 
அவர் மொரட்டுவ - சென் செபஸ்டியன் கல்லூரியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைத்தார். 
 
இதன்படி துனித் வெல்லாலகே தனது 10 வயதில், கல்லூரியின் 13 வயதுக்குட்பட்டோர் C அணிக்காக விளையாடினார். 
 
பின்னர் ஒரு வருடம் கழித்து, அவர் 13 வயதுக்குட்பட்டோர் A அணியில் இணைந்து 57 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமைகளை வெளிப்படுத்தினார். 
 
அத்துடன் குறித்த தொடரில் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த சகலதுறை வீரர் மற்றும் போட்டியின் நாயகன் ஆகிய விருதுகளைத் தன்வசப்படுத்தினார். 
 
மேலும் 2014 ஆம் ஆண்டு மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி 13 வயதுக்குப்பட்டோருக்கான செம்பியன்களாக தெரிவானது சிறப்பம்சமாகும். 
 
இதனையடுத்து துனித் தனது 12 வயதில் 15 வயதுக்குட்பட்ட அணியில் இணைந்து 53 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
அத்துடன் மாவட்டங்களுக்கு இடையேயான மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான போட்டிகளில் கொழும்பு மற்றும் மேல் மாகாண அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் அவர் பெற்றார். 
 
மேலும் இலங்கை 14 வயதுக்குட்பட்ட அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
2017ஆம் ஆண்டு, அவர் கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் துனித் வெல்லாலகே இணைந்தார். 
 
இது அவரது கதையின் மீதமுள்ள பகுதியை மேலும் வெற்றிகரமாக மாற்றியது. 
 
அத்தோடு 15 வயதில், மலேசியாவில் நடைபெற்ற Tuanku Ja’afar கிண்ணத் தொடரில் 15 வயதுக்குட்பட்ட போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தி தனது தலைமைத்துவத் திறமையை வெளிக்காட்டினார். 
 
அதே ஆண்டு சென் ஜோசப் கல்லூரி, 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான இரண்டு நாள் கிரிக்கெட் செம்பியன்ஷிப்பை வெல்வதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். 
 
பின்னர், மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்திய மற்றும் பங்களாதேஷ் இளைஞர் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் துனித் பெற்றார். 
 
இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் சென் ஜோசப் கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக 19 வயதுக்குட்பட்ட இரண்டு நாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அவர் பங்களித்தார். 
 
2020 ஆம் ஆண்டில் சென் ஜோசப் கல்லூரி முரளி-வாஸ் கிண்ணத்தை வெல்ல உதவிய துனித் வெல்லாலகே, 23 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையேயான போட்டியில் லங்கா கிரிக்கெட் கிளப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். 
 
பின்னர் அவர் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட தொடரில் பங்கேற்ற இவர், இரண்டு தொடர்களிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகத் திகழ்ந்தார். 
 
2021 ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியை அழைத்துச்சென்றார். 
 
மேலும் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 
 
இதனையடுத்து குறுகிய காலத்தில், துனித் வெல்லாலகே இலங்கை தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார். 
 
இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் அவர் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 
 
இந்தநிலையில் தற்போது இடம்பெற்றுவரும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் துனித் வெல்லாலகே, தந்தையின் திடீர் மறைவு காரணமாக நேற்று நாடு திரும்பியிருந்தார். 
 
இதனையடுத்து தந்தையின் திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், 2025 ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இன்று காலை டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார். 
 
இதற்கமைய இன்று இடம்பெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் துனித் வெல்லாலகே பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related Recomands
Hiru TV News | Programmes