General30 January 2026

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறதா? : தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப் - ஈலோன் மஸ்க் மோதல்

உலகளவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
 
சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப் படிக்க முடியும் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்தக் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டிய ஈலோன் மஸ்க், 
 
"வட்ஸ்அப் அரட்டைகள் உண்மையிலேயே தனிப்பட்டவையா என்று அமெரிக்க அதிகாரிகள் இப்போது விசாரித்து வருகின்றனர். வட்ஸ்அப்-க்கு பதிலாக எக்ஸ் சாட்-ஐ பயனர்கள் பயன்படுத்தலாம்" என்று கூறி, தனது எக்ஸ் சாட் சேவையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் வட்ஸ்அப் மீது தாக்குதல் நடத்தினார். 
 
ஈலோன் மஸ்க்கின் இந்தக் குற்றச்சாட்டுக்கு வட்ஸ்அப் நிறுவனம் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. 
 
வட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில், 
 
"எக்ஸ் சாட் எதிர்காலத்தில் பாதுகாப்பான உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான பயன்பாடாக மாறும் என்று தோன்றுகின்றது. இருப்பினும், தங்கள் தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, எலானும் அவரது குழுவினரும் வட்ஸ்அப் மீது தாக்குதல் நடத்த ஆர்வம் காட்டுகின்றனர். 
 
இவர்களின் பொய்க் குற்றச்சாட்டுகளால், செட்ஜிபிடி, விக்கிப்பீடியா, கூகுள் தேடல், ஆப்பிள் ஆகியவற்றையும் பாதிக்கின்றது. அவர்கள் பயனர்களை எக்ஸ் சாட் மற்றும் க்ரோக்கிற்கு மாற்ற முயற்சிக்கிறார்கள். 
 
பயனர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் எந்தப் பயன்பாட்டையும் பயன்படுத்த சுதந்திரம் இருப்பதாக நம்புகிறேன். 
 
வட்ஸ்அப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதால், வட்ஸ்அப்பை பயன்படுத்துங்கள் என்று நான் சொல்ல முற்படவில்லை. நீங்கள் விரும்பும் எதனை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். 
 
ஆனால், இந்த மாதிரியான பொய்க் குற்றச்சாட்டுகளை உங்களைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளது. 
 
இந்தச் சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Recomands
Hiru TV News | Programmes