General30 April 2026

எரான் விக்கிரமரத்னவை கட்சியிலிருந்து விலகுமாறு SJB வலியுறுத்தல்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) மீளமைப்புக் குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

இதன்படி கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து எரான் விக்கிரமரத்ன சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும், கட்சியின் கொள்கைகளுக்கு அமைய, அவர் தனது கட்சி உறுப்புரிமையிலிருந்தும் முழுமையாக விலக வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் விளையாட்டுத்துறை நிர்வாக அமைப்புகளில் பதவிகளை வகிப்பதை அனுமதிக்கக்கூடாது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை ரீதியான முடிவின் அடிப்படையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாற்றியமைப்புக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டார்.

நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பில் நீண்டகால சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இந்த குழுவின் முக்கிய பணியாகும்.

இது ஒரு இடைக்காலக் குழு அல்ல என்றும், புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை கிரிக்கெட் கட்டமைப்பை நவீனமயமாக்கும் பணிகளை இது முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes