General09 June 2026

நீதிமன்றத்தில் நடந்த பரபரப்புச் சந்திப்பு: அருட்தந்தை வெளியிட்ட அதிரடித் தகவல்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்த காரணம் கொண்டும் நிறுத்தப்படக் கூடாது என இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனை தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, அவரது நற்பெயருக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தனக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கைச் சமரசம் செய்துகொள்வதற்கு அவரே கோரிக்கை விடுத்த போதிலும், தான் அதற்கு உடன்படவில்லை என அருட்தந்தை சிறில் காமினி இதன்போது தெரிவித்தார்.

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சுரேஷ் சலே அவதூறு வழக்குத் தொடர்ந்து நட்டஈடு கோரியுள்ளதாகவும், அந்த நட்டஈடு செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும் வழக்கை சீர்குலைப்பதற்காகவுமே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன.

எனினும், விசாரணைகளில் வெளிப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே அவர் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பது உண்மை என்றும், வழக்கின் முதல் நாள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீதிமன்றத்தினுள்ளேயே சுரேஷ் சலே தன்னைச் சந்தித்துப் பேசியதாக அருட்தந்தை சிறில் காமினி முதன்முறையாக இங்கு வெளிப்படுத்தினார்.

அருட்தந்தையை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், தனது பெயரைப் பாதுகாப்பதற்காகவே இதனைச் செய்ததாகவும், இதனால் இருவரும் ஒரு சமரசத்திற்கு வர முடியும் என்றும் சுரேஷ் சலே அவரிடம் தெரிவித்துள்ளார்.

அந்தக் தருணத்தில் மற்றுமொரு அருட்தந்தையுடன், தனக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் அங்கு சமுகமளித்திருந்ததாகக் குறிப்பிட்ட அருட்தந்தை சிறில் காமினி, சமரசத்திற்குரிய நிபந்தனைகள் என்னவென்று தாம் சுரேஷ் சலேயிடம் வினவியதாகக் கூறினார்.

அதற்கு பதிலளித்த சுரேஷ் சலே, அருட்தந்தை வழங்கிய அறிக்கையிலிருந்து தனது பெயரை நீக்குமாறு கோரியுள்ளார்.

ஆனால், அவரது பெயரைக் குறிப்பிட்டே தாம் அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும், அதனை நீக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும், அதனை நீக்கப் போவதில்லை என்றும் அருட்தந்தை அவரிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தான் செய்த பிரகாரம் சரியானது என்றே இன்றும் நம்புவதாகவும், இந்த வழக்கைச் சமரசம் செய்யத் தேவையில்லை, நீதிமன்றத்தில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் தாம் அவரிடம் தெரிவித்ததாக அருட்தந்தை சிறில் காமினி விவரித்தார்.

கைது நடவடிக்கையும் விசாரணைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்றும், நட்டஈடு கோரும் வழக்கு என்பது முற்றிலும் வேறுபட்டது என்றும் சுட்டிக்காட்டிய அவர், இந்த குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு சதி இருந்ததா, இது ஒரு அரசியல் சதியா மற்றும் இதன் சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டறிவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும் என்றார்.

எனவே, இந்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதிகளோ தலையிடக் கூடாது என்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி மேலும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes