General16 June 2026

இலங்கையில் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் வீட்டுப் பணியாளர் உரிமைகள் - 'புரொடெக்ட்' சங்கம்' கவலை

வீட்டுப் பணியை கண்ணியமான ஒரு தொழிலாக மாற்றுவதற்காக, ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C189 உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுடன் சரியாக 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், இலங்கையில் வீட்டுப் பணியாளர்களின் நிலைமை இன்னும் பாரதூரமான அவல நிலையிலேயே காணப்படுவதாக 'புரொடெக்ட்' சங்கம் (PROTECT Union) விசேட அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் மூலம் வீட்டுப் பணியாளர்களுக்குக் குறிப்பிட்ட வேலை நேரம், நியாயமான ஊதியக் கட்டமைப்பு, வேதனத்துடனான விடுமுறை மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) / ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) போன்ற சமூகப் பாதுகாப்பு வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகள் இந்த உடன்படிக்கையைத் தங்களது சட்டக் கட்டமைப்பில் இணைத்துக் கொண்டுள்ள போதிலும்,2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஆட்சியாளரோ அல்லது தொழில் அமைச்சோ அதனை உள்நாட்டுச் சட்டமாக மாற்றுவதற்குத் தவறியுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள EPF மற்றும் ETF சட்டங்களிலிருந்தும், 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்திலிருந்தும் வீட்டுப் பணியாளர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், குறிப்பிட்ட வேலை நேரம் அல்லது வேதனத்துடனான விடுமுறைகள் மறுக்கப்பட்டுள்ளதோடு, வயோதிபக் காலத்தில் எவ்வித ஆதரவும் இன்றி அநாதரவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் கூறுகிறது.

"தேர்தல் மேடைகளில் கூறப்பட்ட அழகான கதைகள் அல்ல, அவற்றை நடைமுறையில் சான்றாதாரமாகச் செய்து காட்டுவதே எங்களுக்கு இப்போது தேவையாகவுள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த, தொழிலாளர்களைப் பற்றிச் சிந்திக்கும் ஓர் அரசாங்கம் என்பதையும், ஜனாதிபதி அன்று கூறியது பொய் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுமாயின், தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களையும் உள்வாங்கிக் காட்ட வேண்டும்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டுப் பணியாளர்களுக்கான தொழிலாளர் சட்டங்களை உருவாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அது ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், அந்த வாக்குறுதிகள் பலமுறை பொய்யாகியுள்ளதால், வீட்டுப் பணியாளர்கள் இந்தத் திட்டங்களை அது யதார்த்தமாகும் போது மட்டுமே நம்புவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலம் தொட்டே ஆட்சியாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்குவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வந்துள்ளதாகக் குற்றம் சுமத்தும் 'புரொடெக்ட்' சங்கம், சிறுவர் வீட்டுப் பணியாளர்களாகச் சேவையாற்றிய போது உயிரிழந்த இஷாலினி, ரமணி மற்றும் வெலிக்கடை காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்த ஆர்.ராஜகுமாரி போன்ற சகோதரிகளின் மரணங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes