General22 June 2026

பேருந்து கட்டணம் அடுத்த மாதம் திருத்தப்படுமா?

ஆண்டுதோறும் ஜூலை முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எரிபொருள் விலை மாதாந்த திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டண மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் ஏனைய பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தங்களில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கு பேருந்து கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பேருந்து சங்கம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனால், ஜூன் மாத ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான இறுதித்தீர்மானம், சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர் அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes