General28 June 2026

நாட்டின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் நாட்டின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் காரணமாகக் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு மத்தியிலும், இந்த வருமான அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல்வழிப் போக்குவரத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக, மாற்று ஏற்றுமதி முறைகளை ஏற்றுமதியாளர்கள் கையாண்டமை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு வானூர்தி சரக்கு சேவைகளைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

இதன் மூலம் கடல்வழிப் போக்குவரத்துப் பாதிப்புகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி அளவைச் சீராகப் பேண முடிந்ததாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.

சர்வதேச அளவில் நிலவும் கப்பல் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வாக, இவ்வாறான துரித போக்குவரத்துத் தீர்வுகளை முன்னெடுத்தமை இலங்கையின் தெங்கு ஏற்றுமதித் துறையைப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes