International28 June 2026

செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு

செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தனது பதவியிலிருந்து சில வாரங்களில் விலகப்போவதாகவும், நாட்டில் முன்கூட்டிய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற தனது ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய போதே, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் அதிகாரத்தைத் தன்வசம் வைத்துள்ள வுசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 2024 நவம்பரில் நோவி சாட் நகரில் உள்ள தொடருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து, அரசாங்கத்தின் ஊழல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகச் சீர்கேடுகளின் வெளிப்பாடு என மாணவர் அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் வீழ்ச்சிக்குப் பிறகு செர்பியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.

மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களின் எழுச்சியால் ஏற்படவிருந்த தனது வீழ்ச்சியை முன்கூட்டியே தடுத்து, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே வுசிக் இந்த தேர்தல் நாடகத்தை ஆடுகிறார் என மாணவர் இயக்கத் தலைவர் சாவோ மனோஜ்லோவிக் குற்றம் சாட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes