International05 July 2026

சீனப் போட்டியால் சரிவைச் சந்திக்கும் ஜெர்மனியின் நடுத்தர உற்பத்தித் துறை!

பல தசாப்தங்களாக ஜெர்மன் பொருளாதாரத்தின் மிக வலிமையான தூணாக விளங்கி, உலகத் தரம் வாய்ந்த நற்பெயரைப் பெற்றிருந்த ஜெர்மனியின் நடுத்தர உற்பத்தித் துறை , தற்போது கடுமையான சரிவைச் சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியின் செல்வத்தையும் செழிப்பையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குவது, 'மிட்டல்ஸ்டாண்ட்' என்று அழைக்கப்படும் ஏற்றுமதி சார்ந்த நடுத்தர நிறுவனங்களின் வலையமைப்பாகும்.

இந்த நிறுவனங்கள் முக்கியமாக, உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான உயர்தர இயந்திரங்களையும் மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றன.

ஒரு காலத்தில் உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய இந்த ஜெர்மன் நிறுவனங்கள், தற்போது சீனாவிலிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்கின்றன.

சீன உற்பத்தியாளர்கள் ஜெர்மன் தயாரிப்புகளுக்கு இணையான தரத்தை எட்டியுள்ளதுடன், ஐரோப்பிய நிறுவனங்களின் விலையில் பாதி விலைக்குத் தங்களது தயாரிப்புகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துகின்றனர்.

இதன் விளைவாக, பல தசாப்தங்களில் முதன்முறையாக, ஜெர்மனி சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் இயந்திரங்களின் அளவை விட, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்களின் அளவு அதிகரித்துள்ளது.

தென்மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள, ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் இயந்திர உற்பத்தி நிறுவனமான 'ஆரா' வின் நிர்வாக இயக்குநர் பேட்ரிக் புர்கார்ட் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் சீன நிறுவனங்களின் போட்டி மிகக் கடுமையாகிவிட்டதால், தங்களுக்குக் கிடைக்கும் கொள்வனவு கட்டளைகள் முழுமையாக நின்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பைகள், வாகனப் பாகங்கள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கான வெப்பமூட்டும் உபகரணங்களை வழங்கும் தங்களது நிறுவனம், எஞ்சியிருக்கும் வாடிக்கையாளர்களையாவது தக்கவைத்துக் கொள்ள மிகவும் புதுமையான வழிகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல ஜெர்மன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளைச் சீனா போன்ற பிற நாடுகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes