International11 July 2026

பேச்சுக்கு தயார்! ஆனால் போர் நிறுத்தம் முடிந்து விட்டது- ட்ரம்பின் அறிவித்தல் ஈரானும் பதிலடி!

ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் "முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவித்தலுக்கு மத்தியில் கருத்துரைத்துள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால், ஈரானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழு அளவிலான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்துவிட்டது. இது எதற்கும் தீர்வாகாது. நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்," என்று அந்த நாட்டின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பகர் காலிபாப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தொடர்ந்து தாக்குதல் மிரட்டல்களை விடுத்தல், எண்ணெய் தடைகளை மீண்டும் அமுல்படுத்துதல், ஈரானின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்துதல் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகியவற்றை அவர் அமெரிக்காவின் முக்கிய மீறல்களாகப் பட்டியலிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலக நாடுகளின் முன்னுரிமையாக இருந்தாலும், ஈரானின் சரணடைதலுடன் இந்த மோதல் முடிவுக்கு வராது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த தீவிர தாக்குதல்களுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் தெஹ்ரானில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிதாக முன்னெடுக்கப்பபட்ட இந்த மோதல்களால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவுக்கு விநியோகத் தடைகளைச் சந்தித்து வரும் எரிசக்தி சந்தைகளுக்கு, இது மேலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை , அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, லெபனானின் தெற்குப் பகுதியில் "உணர்திறன் மிக்க நடவடிக்கைகளை" (sensitive operations) மேற்கொள்ள வேண்டாம் என்று தனது இராணுவத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த வாரம் ரோமில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில்,லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சோதனைப் பகுதிகளில் (pilot areas) இருந்து தனது படைகளை இஸ்ரேலிய இராணுவம் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes