General09 August 2026

அரசாங்கத்தின் முதன்மை இலக்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதா? - சஜித் கேள்வி

மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை  உயர்த்துவதற்காக அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

"உர மானியம் வழங்குதல், நீர்ப்பாசன அமைப்புகளைப் புனரமைத்தல் அல்லது சிறைச்சாலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையைஅதிகரிப்பதால் வறுமையோ அல்லது வேலையின்மையோ தீரப்போவதில்லை.

மாறாக, ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் மறைமுக நோக்கமாகும். இதனால் நீதித்துறையின் சுயாதீனம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம்,எரிபொருள், உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது வரிகளை விதித்து மக்களைப் பீடித்துள்ளது.

அத்துடன், இளைஞர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குக் கூட ஆளுங்கட்சியின் அலுவலகப் பட்டியலின் படியே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

வழக்குத் தாமதத்தைக் காரணம் காட்டி ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்களைக்கூட இதுவரை நிரப்பவில்லை.

நாட்டின் அபிவிருத்திக்கு பிராந்திய மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் தேசிய திட்டமொன்றே தற்போதைய முதன்மைத் தேவையாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes