General29 August 2026

இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் சதி: GMOA எச்சரிக்கை!

விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.

இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes