Entertainment15 July 2026

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்? அவரது அலுவலகம் விளக்கம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் அரசியலில் நுழையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை அவரது அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர் ஒரு புகழ்பெற்ற அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்பதால், அவ்வப்போது அவர் அரசியலில் ஈடுபடுவார் என்ற பேச்சு எழுவது வழக்கம்.

அந்த வகையில், 'RAW NTR' என்ற அமைப்பு ஜூலை 18-ஆம் திகதி திருப்பதியில் 'ஊரு வாடா' (Ooru Vaada) என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தது.

இந்த அமைப்பு ஜூனியர் என்.டி.ஆரின் பெயரைப் பயன்படுத்திச் செயல்படுவதாலும், இந்த நிகழ்வின் போது அவர் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதாலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜூனியர் என்.டி.ஆரின் அலுவலகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் 'RAW NTR' என்ற அமைப்புக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ எந்தவிதமான தொடர்பும், உறவும் அல்லது ஈடுபாடும் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூனியர் என்.டி.ஆர் தொடர்பான எந்தவொரு பொதுநலத் திட்டங்கள், சமூக சேவைகள் அல்லது அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும், அவை நடிகர் அல்லது அவரது அதிகாரப்பூர்வக் குழுவின் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes